எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
(குறள் 299: வாய்மை அதிகாரம்)

எல்லா விளக்கும் – புற ஒளியினைக் தரக்கூடிய விளக்குகள், அவை தீ, சூரியன் போன்ற பௌதீகங்களாக இருந்தாலும், அறிவு ஒளியினைத்தரக்கூடிய கல்வி கேள்வி போன்றவையும்

விளக்கல்ல – இவற்றையெல்லாம் வெளிச்சத்தை தரும் விளக்கென்று ஆகா?

சான்றோர்க்குப் – அறிவில் சிறந்த ஞானியருக்கு

பொய்யா விளக்கே – வாய்மையென்னும் பொய்யாமையாகிய மெய்யொளியே

விளக்கு – ஒளியைத் தரும் விளக்கு.

புற இருட்டினைப் போக்கக்கூடிய சூரியனும் தீயும், அறியாமை இருட்டை நீக்கக்கூடிய கல்வியும் உண்மையிலே விளக்கங்களாகக் கருதப்படமாட்டா. அறிவில் சிறந்த ஞானியர்க்கும், துறவற நிலையில் இருப்பவர்க்கும், பொய்யாமையென்னும் உறுதியிலே இருப்பதே அதாவது வாய்மையென்னும் ஒளியைத் தரும் அகவொளி விளக்கே(soul illumination) உண்மையான விளக்காகும்.

எல்லா விளக்கும் என்று சொன்னதால், புற வெளிச்சத்தைத்தரும் இயற்கையாயும், செயற்கையாயும் உள்ள பௌதீக ஒளிமூலங்களை குறிப்பதாகக் கொள்ளுவர். இது, வாழ்க்கை நடத்துதற்கும், வசதிகளுக்காகவும் தேவையான கல்வியறிவும் புறவொளிதரும் வகையின. அகவொளியைத் தருவதும் ஞானத்தைத் தருவதுமான மெய்யறிவு எதுவோ, எவ்வறிவு ஒருவரை எக்காரணம் கொண்டும் பொய்யாமை என்னும் வாய்மை நிலையில் நிறுத்துமோ, அதுவே உண்மையான வெளிச்சத்தைத் தரும் ஒளிவிளக்காம்.

Translate »