ஒருநாள் இரண்டுநாள் அல்லநான் உலகத்து உதித்த இந் நாள் வரைக்கும்
ஒழியாத கவலையால் தீராத இன்னல்கொண்(டு) உள்ளந் தளர்ந்து மிகவும்
அருநாண் இயற்றிட்ட விற்போல் இருக்குமிவ்வடிமைபாற் கருணை கூர்ந்து
அஞ்சேல் எனச்சொல்லி ஆதரிப் பவர்கள் உனை அன்றியிலை உண்மை யாக
இருநாழி கைப்போதும் வேண்டாது நிமிடத்தில் இவ்வகில புவனத்தையும்
இயற்றி அருளுந்திறம் கொண்டநீ ஏழையேன் இன்னல்தீர்த் தருளல் அரிதோ?
வருநாவ லூரர்முத லோர்பரவும் இனியபுகழ் வளர்திருக் கடவூரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி! உமையே!
எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல் ஏறிட் டொறுக்க அந்தோ!
எவ்விதம் உளஞ்சகித்து உய்குவேன்; இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்
நண்ணியெள்ளளவுசுக மானதொரு நாளினும் நான்அனு பவித்த தில்லை
நாடெலாம் அறியுமிது கேட்பதேன்? நின்னுளமும் நன்றாய் அறிந்திருக்கும்;
புண்ணியம் பூர்வசன னத்தினிற் செய்யாத புலைய னானாலும் நினது
பூரண கடாட்சவீட் சண்ணியஞ்செய்தெனது புன்மையை அகற்றி அருள்வாய்;
மண்ணவர்கள் விண்ணவர்கள் நித்தமும் பரவும்இசை வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ் வாமி!அபி ராமி! உமையே!
ஞானந் தழைத்துன் சொரூபத்தைஅறிகின்ற நல்லோர் இடத்தினிற்போய்
நடுவினில் இருந்துவந் தடிமையும் பூண்டவர் நவிற்றும் உபதேச முட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனது நானெனுமானம் இல்லாமலே துரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப் புதைத்துநெஞ்(சு)ல் இருளற விளக்கேற் றியே
ஆனந்த மானவிழி அன்னமே! உன்னைஎன் அகத்தாமரைப்போ திலே
வைத்துவே றேகவலை யற்றுமே லுற்றபர வசமாகி அழியாத தோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண்; ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே!
மிகையுந் துரத்தவெம் பிணியுந் துரத்த வெகுளி யானதுந் துரத்த
மிடியுந் துரத்தநரை திரையும் துரத்தமிகு வேதனை களுந் துரத்த
பகையுந் துரத்தவஞ் சனையுந் துரத்த பசியென் பதுந் துரத்த
பாவந் துரத்த பதிமோகந் துரத்த பலகா ரியமுந் துரத்த
நகையுந் துரத்தஊழ் வினையுந் துரத்த நாளுந் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை நமனுந் துரத்து வானோ?
அகிலஉல கங்கட்கும் ஆதார தெய்வமே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே
-அபிராமி அந்தாதி