குமாரதேவரின் உபதேசங்கள்

கனவில் ஒருவனுக்கு உணர்வு தோன்றி, தான் காண்பது கனவு என்று உணருங்கால், அவனை நீ யார் என்று யாரேனும் கேட்டால், அவன் தன்னுடைய நனவு நிலை அடையாளத்தைத்தான் சொல்வான். அது போல இந்த நனவு உலகத்தைக் கனவு என்று ஒருவன் உணரத் தொடங்கினால், அவனை நீ யார் என்று கேட்டால், அவன் தன்னை பிரமம் என்றுதான் சொல்லுவான். 
கனவைக் கனவு என்றுணர்ந்தவனைக் 
கனவில் நீயார் எனவொருவன் 
வினவில் அவனும் நனவதனில் 
விளங்கும்தனையே உரைப்பன் அதில் 
நனவை நினைவு என்று உணர்ந்தவனை 
நனவில் நீ யார் என ஒருவன் 
வினவில் அவனும் அகண்டமதாய் 
விளங்கும் பிரமமே என்பான். 
சரி. நனவில் விழித்துக் கொள்வதெப்படி?
தோன்றிவிளங்கும் பொருள் எல்லாம்
தொல்வேதாந்த விசாரணையில்
ஊன்றி நோக்கி அனுதினமும்
யூகமதனில் பரிசயித்தால்
தோன்றி விளங்கும் அறிவொன்றே
சொல் மாத்திரமாய் விடும் உலகம்
ஊன்றி நோக்காதவர்கட்கே
உளது போலத் தோன்றியிடும்.
ஏகம் ஆகி நின்மலமாய்
இருக்கும் நமக்கு இப்பந்தம் எனும்
மோகம் வந்தது ஏதென்று
முன்பின் பாராது இப்பந்தம்
போகவழி ஏதென நாடிப்
பொருந்தும் வேத விசாரணையால்
யூகம் அதனில் சிதைக்கின் அதின்
உள்ள இயல்பு பின் தோன்றும்.
மாயை எனும் உரைக்கு அருத்தம்
மதிக்கின் யாதொன்று இலாததுவே
மாயை என இப்படி இருக்க
மதிப்பர் அதனை இருவகையாய்
மாயை மெய்யென்று உரைத்திடுவர்
மயக்கப்பட்டுத் தனை மறந்தோர்
மாயை பொய்யென்றுரைத்திடுவர்
மயக்கம் நீங்கித் தனை அறிந்தோர்.
முத்தி யாதோ என எண்ணி
முயங்க வேண்டாம் இஃதறுதி
முத்தி உளதேல் பந்தமுண்டாம்
முத்தி ஒருகாலையும் இல்லை
முத்தி தானாம் சகம் வேறின்
மோகம் அதில் காண்பதைப் போக்கின்
முத்தியாகும் அந்நிலையை
முயன்று வருந்தி நிலை கொள்வாய்.
தமக்கு மிக அரிய அத்வைத ஞானத்தைத் தந்தது விருத்தாசலத்து அம்பிகை என்று போர்றித் தொழுகிறார் ஸ்ரீகுமாரதேவர்.
என்னை அறியாது இதுவரையும்
ஏங்கி உழன்று கிடப்பேற்குத்
தன்னை நிகராம் விருத்தகிரி
தங்கும் உமையே தயவாகிப்
பின்னை யானும் தானும் ஒன்றாம்
பிரமம் தனையே அறிவித்து
முன்னை மயக்கம் தனைக் கெடுத்த
முதல்விக்கு எனையோ கைம்மாறே.
Courtesy: http://mohanaranganreads.blogspot.in/2014/04/blog-post_5832.html

1 thought on “குமாரதேவரின் உபதேசங்கள்

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *